தனிச் சிறப்பு அடையாள அட்டை திட்டம் : 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு


நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும், தனிச்சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கு, 3,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 10 கோடி அடையாள அட்டைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தனிச்சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக நிதி வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மொத்தம், 3,023 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புக் கொண்டது. இதில், 2,545 கோடி ரூபாயை, அடையாள அட்டை வினியோகம் செய்யும் பணிக்கும், 478 கோடி ரூபாய் வரை, நிர்வாக செலவுகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், வரும் ஆகஸ்டில் துவங்கி, 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதற்கட்டமாக, 10 கோடி அடையாள அட்டைகள் வழங்கப்படும். அடுத்தடுத்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, 2014ம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கில், 60 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கி முடிக்கப்படும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் பங்குகளில் மேலும் 10 சதவீதத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அந்நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, 2007ம் ஆண்டு அக்டோபரில் அரசு கைவசம் இருந்த 5 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்தது. இதன்மூலம் 3,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டது. இதில், 1,000 கோடி ரூபாய் வரை அந்நிறுவனம் அரசுக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முடிவாக, பீகாரில் உள்ள அதுரகி என்ற வகுப்பைச் சேர்ந்தவர்களை மத்திய அரசில் தற்போதுள்ள பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்குள் சேர்ப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment