தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்

தமிழரின் வாழ்விலும், பண்பாட்டிலும் பொங்கலிற்கு ஈடான பண்டிகையுமில்லை, தைக்கு ஈடான மாதமும் இல்லை.

தங்களது வாழ்வில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், எத்தனைச் சிக்கல்கள் தோன்றினாலும், அதற்கெல்லாம் தீர்வையும், விடையையும் தரும் என்ற அனுபவப்பூர்மான நம்பிக்கையுடன் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி தமிழர் வாழ்வில் என்றோ தோன்றி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. 

அந்த அளவிற்கு தை மாதப் பிறப்பு தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால்தான் அம்மாதப் பிறப்பையே ஆண்டின் துவக்கமாகவும், முதன்மைப் பண்டிகையாகவும் தமிழ் மண்ணெங்கும் கொண்டாடப்படுகிறது.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவரும் ஒரு நெடிய நாகரீக இனமான தமிழரின் வாழ்வில் கோள்களின் நிலையும் சுழற்சியும் அவர்தம் வாழ்க்கைப் போக்கையும், பண்பாட்டையும் நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.

நாம் வாழும் இப்புவி, சூரிய மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளதாலும், அதன் இருப்பும், வளமும் சூரியனைச் சார்ந்தே திகழ்வதாலும், தமிழரின் வாழ்வில் சூரியனுக்கே முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. புவியின் நீள்வட்ட சுழற்சிப் பாதையில் சூரியனில் இருந்து அதிக தூரத்திற்குச் சென்று, மீ்ண்டும் அதனை நோக்கிய குறுகிய தூரப் பாதைக்கு வரத்தொடங்கும் நாள் - அதாவது புவியில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாட்டில் வாழும் நம்மைப் பொறுத்தவரை பூமத்திய ரேகையின் தெற்கிலுள்ள மகர ரேகையிலிருந்து வடக்கிலுள்ள கடக ரேகையை நோக்கி (தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு) சூரியன் வரத்தொடங்கும் நாள் - தை முதல் தேதியாகும். 


தமிழரின் வாழ்வில் இறையின் அடையாளமாக (அது நமது புவி வாழ்வின் ஆதாரமாகத் திகழ்வதால்) ஞாயிற்றைப் போற்றுகின்றனர். எனவே இறை வழிபாடும், இயற்கை வழிபாடும் ஒரு நாளில் தைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பொங்கலுடன் துவங்கும் புது வாழ்வு ஆடிப் பட்டம் தேடி விதைத்து, தென் பெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே தாமிரபரணி வரை உள்ள தமிழ்நாட்டின் நதிகளில் தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழைகளால் ஏற்படும் புதுப் புனலை எதிர்பார்த்து நாற்று விட்டு, களையெடுத்து மார்கழி முடிவிற்குள் கதிரறுத்து, களத்து மேட்டில் போரடித்து, சிதறிக் குவிந்த நெல்லை வீட்டுப் பத்தாயத்தில் கொண்டு வந்து நிரப்பி, இயற்கையின் பலனை உழைத்துப் பெற்ற உவகையுடன் தை முதல் நாளில் அந்த புது நெல்லைக் குத்தி அரசியாக்கி, புதுப் பானைகளிலிட்டு, வீட்டிற்கு வெளியே அடுப்புக் கட்டி சூரியனை வணங்கி, அதில் வெண் பொங்கலாகவும், சக்கரைப் பொங்கலாகவும் சமைத்து, பக்கத்திற்குஒன்றாக கரும்பு சாத்திவைத்து பானையிலிட்ட அரிசி வெந்து பொங்கிவரும் வேளையில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்கி தன் மாநிலம் நோக்கி வரும் பகலவனை வணங்கி புத்தாண்டை கொண்டாடும் மரபு தமிழர் வாழ்வின் அடையாளமானது.

ஆக பகலவனின் வட பயணத் துவக்கமே ஆண்டின் துவக்கமாகவும், தற்காரியங்களை நடத்துவதற்கான நேர சமிக்ஞையாகவும் தமிழர் வாழ்வில் உள்ளது.

அதுமட்டுமல்ல, நல்ல நேரம் என்று இன்று நிர்ணயிக்கப்படும் முறையில் இருந்து மிக ஆழமாக வேறுபட்டதாக தமிழரின் பார்வை இருந்துள்ளது. அவர்கள் ‘நல்லோரையில்’ என்றே குறித்து நற்காரியங்களைச் செய்தனர். இந்த ஓரை என்பது என்னவெனில், ஒவ்வொரு கிழமைக்கும் உரிய கிரகத்தின் பாதையில் சூரியன் பயணிக்கும் நேரமாகும். அதில் புதன், சுக்கிரன், குரு ஆகிய ஓரைகளில் விதை விதைத்தல், திருமணம் செய்தல் உள்ளிட்ட நற்காரியங்களைச் செய்தனர். அதேபோல பெளணர்மி ஓரையும் நல்ல நேரமாக கொள்ளப்பட்டுள்ளது.

இன்றும் தை பிறந்தபின்னரே பெண் பார்த்தல், திருமண நிச்சயம் செய்தல் போன்றவையெல்லாம் செய்யப்படுவது வழமையாக உள்ளது. தொழில் தொடங்குதல், விற்றல் - வாங்கல், புது மனை புகுதல் ஆகியன தையிலேயே - குறிப்பாக கிராமங்களில் - நடத்தப்படுவதைக் காணலாம்.

தமிழர்களின் வாழ்வில் பொது விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கும் சூரியனே அடிப்படையாக உள்ளார். கடகத்தை நோக்கி தையில் நகரத் துவங்கி, சித்திரையில் உச்சிக்கு வர, உழவுத் தொடர்பான வேலை ஏதுமற்ற அந்த மாதத்தில்தான் இந்திரன் விழா, காமன் பண்டிகை, வைகாசி விசாகம், குல தெய்வங்களுக்கு படைத்தல் ஆகியன நடைபெற்று வந்துள்ளன. பிற்காலத்தில் இந்த மாதத்திலேயே தமிழ்நாட்டின் கோயில்கள் அனைத்திலும் திருவிழாக்கள் நடத்துவதும் வழமையாகியுள்ளது.

தமிழர்களின் தெய்வமான முருகனுக்கும் தை மாதத்திலேயே (பூச நட்சத்திரத்தில்) காவடி எடுத்து வழிபாடும் செய்யும் முறையும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. 

ஆக தமிழரின் வாழ்வும் வளமும் தை மாதத்தையே அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. எனவேதான், தை மாதத்தை தமிழாண்டின் துவக்கமாக கொள்ள வேண்டும் என்று தமிழ் அறிஞர்களின் விடுத்த வேண்டுதலை ஏற்று தமிழக அரசு தை மாதத்தை தமிழர் புத்தாண்டாக அறிவித்தது.

தை பிறக்கட்டும் தமிழர் வாழ்வு செழிக்கட்டும்.

No comments:

Post a Comment