குபேரனை அறியாத தமிழர்கள்

அண்மைக் காலங்களாக வணிக நிலையங்களிலும் வீடுகளிலும் ஒரு குண்டு பொம்மைஒன்றைவைத்து இருப்பார்கள். அது வாயை ஆ.. என்றுதிறந்து சிரித்துக் கொண்டு இருக்கும்.

அதற்கு முன்னுக்கு சில்லறை காசுகளையும் போட்டு சாம்பிராணியும் கொளுத்தி வைத்துஇருப்பார்கள். இது யார் என்று கேட்டால், இது குபேரன் என்பார்கள்.உண்மையில் அது குபேரனா என்றால் இல்லை. யார் அந்த பொம்மை? அவர் ஒரு பௌத்த துறவி (பிக்கு) கிழக்கு ஆசிய நாட்டை சேர்ந்தவர். கிழக்கு ஆசிய நாட்டவர்கள் பிக்குகளை புத்தா என்றேஅழைப்பார்கள். இவரை happy புத்தா அல்லது lucky புத்தா என்றே அழைப்பார்கள். 

கிழக்கு ஆசிய நாட்டவர்கள் தங்கள் வணிக நிலையங்களிலும், வீடுகளிலும் வைத்து வணங்குவார்கள். மேற்கு உலக நாட்டவர்கள் தங்கள் வீட்டிலும் பொதுவாக வீட்டு பின்தோட்டத்திலும் அழகிற்கு வைத்து இருப்பார்கள். இவரை சிங்கப்பூர் மலேசிய தமிழர்கள், தமிழ் நாட்டுக்கு அவர் தான் குபேரன் என்று அறிமுகம் செய்ய, பின்பு தமிழ் நாட்டில் இருந்து பிற தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளுக்கும் பரவி விட்டது. குபேரனை வைத்து வணங்கினால் பணம் கொட்டும், செல்வம் கூடும் என்ற ஒரு நம்பிக்கையினால் எம்மவர்கள் பேராசை காரணமாக பன்றிக்காய்ச்சல் போல் இதுவும் பரபரப்பாக எங்கும் பரவி விட்டது.

ஒரு பிக்குவை ஏன் எம்மவர்கள் வணங்கவேண்டும்? எட்டாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் நாடு எங்கும் பௌத்தமும் சமணமும் பரவிக் கிடந்தது. சைவம் அழியும் தருவாயில் இருந்த போது திருஞானசம்பந்தர் தோன்றி நாலு வயதில் நாலடி ஓதிய போது, பௌத்தமும் சமணமும் அழிந்து போனது தமிழ் நாட்டில்.

 எம் சமயத்தில் மூடநம்பிக்கைகள், சாதி மற்றும் பிரிவுகள் கிடையாது ஆனால் எம் மக்களிடம் உண்டு. தெய்வம் இவைகளை உருவாக்கவில்லை. மக்களே உருவாக்கிக் கொண்டார்கள். பின்பு அதனால் வரும் வினைப்பயனையும், துன்பத்தையும் இறைவன் தந்ததாக அவர் மீது பழி சுமத்துகின்றார்கள்.

எனக்கு அதை செய், இதை செய் என்று கடவுள் கேட்டாரா? சாமியாராக பிறந்து அருள் தந்தாரா? சாதியை கடவுள் வகுத்தாரா? சைவம், வைணவம் என்று கடவுள் பிரித்தாரா? இல்லவே இல்லை. நாமே செய்தோம்.

ஒரு கோவிலுக்கு சென்றோம் என்றால் அங்கு எல்லாத் தெய்வங்களும் உள்ளார்கள். அவர்களுக்கு உறவு முறையும் உண்டு. எம் மதம் முதல் மதம், அதற்கு பெயர் கிடையாது நாமே வைத்துக் கொண்டோம். தொழில், பரம்பரை, வசதி போன்றவற்றை வைத்து நாமே சாதிகளையும் உருவாக்கி பெயரும் வைத்தோம்.

ஆகவே நாம் செய்த தவறுகளிற்கு இறைவன் காரணமாக முடியாது. நாமே காரணம். வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

எமது சுயநலத்துக்காக நாமே எல்லாவற்றையும் உருவாக்கிக் கொள்கின்றோம் ஆனால் முடிவில் ஏதுமே எமக்கு சொந்தம் கிடையாது. பொருள் மட்டும் அல்ல சாதி, மொழி, இனம், மதம் என்று எல்லாமே.

ஒவ்வொரு பிறப்பிலும் நாம் செய்கின்ற பாவமும் புண்ணியமும் மட்டுமே எமக்குச் சொந்தம். அதற்கு ஏற்ப எங்கெங்கோ அறியா இடங்களில், அறியா பிறப்புக்களை எடுக்கின்றோம் இதுவே உண்மை.

--ரகுவீரன்--

சிறப்பு அதிரடி வீரர் (S.A.C)

http://www.unarvukal.com/

No comments:

Post a Comment