கொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொடுமணல் என்ற சிற்றூர் சங்க காலத்தில் கொடுமணம் என்ற பெயருடன் ஒரு பெரிய வணிக மையமாகத் திகழ்ந்தது (பதிற்றுப்பத்து 67, 74). இங்குப் பேராசிரியர் எ.சுப்பராயலு தலைமையில் இருபது ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட 170 பானையோடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன (எ.சுப்பராயலு 1996). இவ்வெழுத்துப் பொறிப்புகளில் மிகப் பெரும்பாலானவை தமிழ் மொழியில், தமிழ் பிராமி எழுத்துகளில் அமைந்துள்ளன. ஒரு பெரிய தாழியின் வெளிப்புறத்தில் அதன் கழுத்தைச் சுற்றி ஒரு நீண்டவரி பொறிக்கப்பட்டுள்ளது (மேற்படி எண் 3). எழுத்தமைதியிலிருந்தும் மண் அடுக்குகளின் அடிப்படையாலும் இது ஏறத்தாழ கி.மு.2ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் பழந்தமிழ்ச் சொற்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

தாழி உடைந்துள்ளதால் முதல் சில எழுத்துகள் கிடைக்கவில்லை. இப்பொழுது 13 எழுத்துக்களே எஞ்சியுள்ளன. அவற்றை எழுத்தெழுத்தாகப் பின்வருமாறு படிக்கலாம்.


நன்றி : எ.சுப்பராயலு


. . . ய தாண வேண நிர அழி ஈய தடா (1)

இவற்றுள் முதல் எழுத்து இப்பொழுது கிடைக்காத ஒரு சொல்லின் ஈறு என்று தோன்றுகிறது. அதை நீக்கிவிட்டு ஏனைய 12 எழுத்துகளை முந்து தமிழ் பிராமி முறையில் (TB-I) பின்வருமாறு வாசிக்கவேண்டும்.

தண் வெண் நிர் அழிஇய் தடா (2)

இந்த வாக்கியத்தைச் செந்தமிழ் நடையில் மாற்றியமைத்து, இய் என்ற பெயர்ச்சொல்லின் விகுதியை நீக்கிவிட்டுப் பின்வருமாறு படித்தால் இதன் பொருள் வெளிப்படுகிறது.

தண்[நீர்*] வெந்நீர் அழி தடா (3)

அதாவது, 'தண்ணீரும் வெந்நீரும் புகும் தாழி' என்பது பொருள்.

குறிப்புகள்

தண்[ணீர்*], வெந்நீர் : முதல் இருசொற்களும் தெளிவாகவே உள்ளன.

அழி : இப்பழந்தமிழ்ச்சொல் வினைச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் வரும். அழி - தல் : 'பெருகுதல்'. (எ-கா) அழியும் புனல் அஞ்சன மாநதியே (சீவக.1193). ஆனால் பானைமீது பொறிக்கப்பட்டுள்ள சொல் ஒரு பெயர்ச்சொல் என்று அதன் - இய் விகுதியிலிருந்து தெரிகிறது. (எ-கா) காவிதி - இய், நெல்வெளி - இய். (குகைக் கல்வெட்டுகள் : மகாதேவென் 2003) ஆகையால், அழி தடா என்பதற்கு '(நீர்) பெருகும் தாழி' என்று வினைத்தொகையாகப் பொருள் கொள்ளமுடியாது. அழி - ஐப் பெயர்ச்சொல்லாகக் கொண்டால் பின்வரும் சொற்களுடன் ஒப்பிடலாம்.

அழிவி : 'கழிமுகம் (தமிழ் லெக்சிகன்). ஆறு கடலில் புகும் இடம்.

அழிவாய் : 'சங்க முகம்' (தமிழ் லெக்சிகனில் சங்க முகத்து 'மணல்மேடு' என்று சேர்த்திருப்பது பிழையாகும்.)

தடா : 'பானை, மிடா' (திவாகர நிகண்டு) - 'தடவுத் தாழி' (தமிழ் லெக்சிகன்). தடவு என்பதற்கு, 'ஓம குண்டம்' என்றும் பொருள் உண்டு; அது இங்குப் பொருந்தாது. புறநானூறு 201ம் பாடலில் 'வடபால் முனிவன் தடவினுள் தோன்றி' என்ற வரியில் 'தடவு' என்ற சொல்லுக்குப் பழைய உரைகாரர், 'ஓமகுண்டம்' என்று பொருள் கூறியுள்ளதை மறுத்து, மு.இராகவையங்கார், தமது வேளிர் வரலாறு என்ற அரிய ஆய்வு நூலில், தடா, தடவு : 'பாத்திரம்' என்று நிறுவி உள்ளார்.

புறநானூற்று உரைகாரர் இந்த இடத்தில், 'கதை உரைப்பின் பெருகும்; அது கேட்டுணர்க' என்று கூறிச் சென்றுவிட்டார். 'வடபால் முனிவன்' என்பது சம்பு முனிவன் என்பவரைக் குறிக்கும் என்ற வரலாறு உண்டு. ஆயினும், 'வடபால் முனிவன் தடவினுள் தோன்றி' என்ற பாடல் வரிக்கு, 'அகத்திய முனிவரின் தீர்த்த பாத்திரத்தில் தோன்றிய வேளிர்' என்று பொருள் கொள்வதே வேளிர் வரலாற்றுக்கு இயைந்ததாக உள்ளது. சங்க நூல்களில் அகத்தியரைப் பற்றி வரும் ஒரே குறிப்பு இதுவாகும் (மகாதேவன் 1986).

இறுதியாக, தண்ணீரும் வெந்நீரும் புகும் தடவு கொடுமணலில் எதற்காகப் பயன்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இப்பெரிய தாழி தனியாரின் வீட்டில் இல்லாது ஒரு தொழிற்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. நெசவுத் தொழிலில் சாயப்பட்டறைக்குப் பெருமளவில் தண்ணீரும் வெந்நீருர்ம் தேவைப்படும். இன்றுவரை நொய்யல் ஆற்றங்கரை ஊர்களில் சாயப்பட்டறைகள் அதிகமாகச் செயல்பட்டு வருகின்றன. அல்லது கொடுமணத்தின் புகழ் பெற்ற தொழில்களான மணிகளை உருவாக்குதல், இரும்புக் கருவிகளைச் செய்தல் போன்ற தொழில்களுக்காகவும் தண்ணீரையும் வெந்நீரையும் சேமித்து வைக்கும் தாழியாக இது பயன்பட்டிருக்கக்கூடும்.

துணை நூல்கள்

1. சீவக சிந்தாமணி, உ.வே.சாமிநாதையர் உரை, 1887, மறுபதிப்பு.

2. திவாகர நிகண்டு, சாந்தி சாதனா பதிப்பு, 2004.

3. பதிற்றுப்பத்து, உ.வே.சாமிநாதையர் உரை, 1904, மறுபதிப்பு.

4. புறநானூறு, உ.வே.சாமிநாதையர் உரை, 1894, மறுபதிப்பு.

5. மு.இராகவையங்கார், வேளிர் வரலாறு, 1907, மறுபதிப்பு.

6. I.Mahadevan, Agastya and the Indus Civilizatiton, Journal of Tamil Studies, No. 30, 1986.

7. I.Mahadevan, Early Tamil Epigraphy, 2003.

8. Y.Subbarayalu, Illustrated Catelogue of Pottery Inscriptions from Kodumanal, 1996.

9. Tamil Lexicon, Madras University.

No comments:

Post a Comment