ஈக்வடார் நாட்டு மழைக்காடுகளை நச்சு மயமாக்கியுள்ள அமெரிக்க எண்ணெய் நிறுவனம்

ஈக்வடார் நாட்டின் வளமான அமேசான் மழைக்காடுகளில் கடந்த 26 ஆண்டுகாலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுத்து வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் எண்ணை உற்பத்தி நிறுவனமான செவ்ரான் சுமார் 18 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) காலன்கள் கொடிய நச்சுக் கழிவுகளை அங்கு கொட்டி வருகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலருக்கும் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. கருச்சிதைவு, உடல் ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட மிக மோசமான நோய்கள் உருவாகியுள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதாவது செர்னோபில் அணுக்கசிவைக் காட்டிலும் 30 மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சுத் தன்மையுள்ள கழிவுகளை 1979ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை கொட்டியுள்ளது. இன்னமும் கொட்டி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஐந்து பூர்வக்குடியினர் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், உலகின் மிக மோசமான நச்சுக் கழிவு தொடர்பான பேரழிவு ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால் வழக்கம் போல் அந்த நச்சுக்கழிவினால் ஆபத்து ஒன்றும் இல்லை அது உடம்புக்கு நல்லது என்றே கூறிவருகிறது இந்த அமெரிக்க அரக்க எண்ணெய் நிறுவனம்.

இந்த செவ்ரான் என்ற நிறுவனம் சுற்றுச்சூழல் மோசடிகளுக்கு பெயர் பெற்ற நிறுவனம் என்று ஏற்கனவே பெயர் எடுத்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, காசுக்காக அறிவை விற்றுப் பிழைக்கு கார்ப்பரேட் போலி விஞ்ஞானிகள் மூலம் அந்தக் கழிவுகளில் நச்சு ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் 30 ஆண்டுக்கால மோசடிகளை எதிர்த்து 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு, இது போன்ற பொறுப்பற்ற, ஏழை மக்களின் உயிரை கடுகளவும் மதிக்காஅமெரிக்க, ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கால்பந்து மைதான அளவு இடப்பரப்பு உள்ள இடங்கள், ஓடைகள், நதிகள் என்று அப்பாவி மக்கள் புழங்கும் எந்த ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் படு பயங்கர புற்று நோயை உருவாக்கும் இந்த நச்சுக் கழிவை செவ்ரான் நிறுவனம் அராஜகமாக கொட்டி வருகிறது. சுமார் 700க்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது ஏக்கர் கணக்கில் இந்த உயிர்க்கொல்லி நச்சுக் கழிவைக் கொட்டி வைத்துள்ளது செவ்ரான்.

இதோடு மட்டுமல்லாமல் தற்போது இந்த நச்சுக் கழிவுகள் நிலத்தடி நீரிலும் கலந்து வருகிறது. மேலும் இந்த நச்சுக் கழிவு நதிகள் மூலம் பெரூ நாட்டிற்கும் செல்கிறது. குடிநீருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும் அப்பகுதி மக்கள், இந்த நீரை தினமும் அருந்தி, அதில் குளித்து தங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாக நச்சுமயமாக்கிக் கொள்கின்றனர்.

ஈக்வடாரில் குழந்தைப் பருவ லுகேமியா என்ற கொடிய நோய் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியில் 4 மடங்கு அதிகமாக உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சாதரணமாக இறக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அனைவரும் தற்போது இந்த நச்சுக்கழிவின் தாக்கத்தினால்தான் இறந்துள்ளனர் என்ற பயங்கர உண்மையும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் எண்ணெய் உறிஞ்சும் இந்த நிறுவனம், அங்கு இந்த நச்சுக் கழிவுகளை அகற்ற உயர் தொழில் நுட்பத்தை கடைபிடித்து வருகிறது. ஆனால் ஈக்வடாரில் தனது எண்ணெய் உறிஞ்சுதல் நடவடிக்கைகளை துவங்கியபின் இந்த கழிவகற்ற உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை.

இதம் மூலம் பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்கள் மிச்சம் பிடிப்பதோடு, மொத்த காலன்கள் உற்பத்தியில் 4.5 பில்லியன் டாலர்கள் மிச்சம் பிடிக்கிறது செவ்ரான்!

இந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வரும் இந்த மைல் கல் வழக்கின் மீதான தீர்ப்பை எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment