சீனாவிலிருந்து வெளியேறுகிறது கூகுள்?


தங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என சீனா மிரட்டல் விடுத்துள்ளதால் அந்நாட்டிலிருந்து வெளியேற நேரிடும் என பிரபல இணைய தேடல் நிறுவனமான கூகுள் தெரிவித்துள்ளது. 

கம்யூனிஸ்ட் நாடான சீனாவில், அந்நாட்டை பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை வெளியிடுவதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு தரப்பு ஏஜென்சி மூலமே செய்திகள் ஊடகங்களுக்கு அளிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மாணவர் கிளர்ச்சியையும், போராட்டத்தின்போது தியான்மர் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டதையும் சீன அரசு இரும்புத் திரை போட்டு மறைத்துவிட்டது. 

அது மட்டுமல்லாது இதேப்போன்ற மேலும் பல போராட்டங்களையும் சீன அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிட்டது. ஆனால் அப்போது ஏராளமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாக குற்றச்சாற்று எழுந்தன. இருப்பினும் அவை வெளிவராமல் சீன அரசால் பார்த்துக்கொள்ளப்பட்டன. 

ஆனால் சீன அரசின் இதுபோன்ற கறுப்பு பக்கங்கள் இணைய தள பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 'பிளாக்' எனப்படும் வலைப்பூக்களில் சீன அரசின் அடக்குமுறைகள் குறித்த கட்டுரைகள் ஏராளமாக இடம்பெறத் தொடங்கின. அத்துடன் சீன அரசு மறைக்க நினைக்கும் தகவல்கள் மற்றும் செய்திகள் இணைய தளங்களில் வெளியாகிவிடுகிறது. 

இது சீன அரசுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் கூகுள் நிறுவனத்தின் சீன செயல்பாட்டிற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக அயல்நாடுகளில் இயங்கும் மனித உரிமை குழுக்களின் இணைய தளங்கள் மற்றும் பிளாக்குகளுக்கு தடை விதித்தது. 

சீன அரசின் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, தாங்கள் தங்களது சேவையை விலக்கிக்கொண்டு சீனாவிலிருந்து வெளியேற நேரிடும் என கூகுள் எச்சரிக்கை விடுத்தது. 

ஆனாலும் கூகுளின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத சீன அரசு, தங்கள் நாட்டில் செயல்பட வேண்டுமென்றால் தங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் இயங்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

பீஜிங்கில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் மா ஜாக்ஸு, பொதுமக்களின் நலன்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பாரியம் போன்றவற்றை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்றார். 

எனவே சீனாவில் இயங்கும் அயல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்க வேண்டும் என்றும், இதற்கு கூகுள் மட்டும் விதிவிலக்கு அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment