அதிமனிதனைத் தோற்றுவிப்பதே நமது யோகத்தின் நோக்கம் - ஸ்ரீஅரவிந்தர்

இவ்வுலக வாழ்க்கையிலேயே நமது யோகம் நடைபெற வேண்டும், எங்கோ தொலைவில் அப்பாலுக்கப்பால் உள்ள மோனானந்தத்தில் அல்ல. சாதாரணமாக நமது சிந்தனை, நமது அறிவு, நமது உணர்ச்சி, நமது ஜீவன் எல்லாம் ஆழமில்லாமலும், குறுகியதாயும், சிதறிப்போனதாகவும் உள்ளன.



இவையெல்லாம் ஆழ்ந்த, பரந்ததோர் ஆன்ம உணர்வாக உருமாற்றமடைய வேண்டும். அகவாழ்வும் புறவாழ்வும் ஒன்ற வேண்டும். மனித வாழ்வு தெய்வ வாழ்வாக மலர வேண்டும். இந்த மகத்தான மாற்றமே நமது யோகத்தின் முதன்மையான இலட்சியமாகும். நமது உள் ஜீவன் முழுவதையும், நமது புற இயற்கை முழுவதையும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்துவிடுதல், இந்த அதி உன்னத இலட்சியத்தை அடைவதற்கான உபாயமாகும். நமது உள்ளத்தே கோயில் கொண்டுள்ள அந்தர்யாமிக்கே, அனைத்துலகாய் விரிந்துள்ள விஸ்வேஸ்வரனுக்கே, அனைத்திற்கும் அப்பால் அனைத்திற்கும் மூலமாய் உள்ள பரமேஸ்வரனுக்கே எல்லாவற்றையும் கொடுத்துவிட வேண்டும். நமது இச்சா சக்தி, நமது இதய உணர்ச்சி, நமது சிந்தனையெல்லாம் ஏகனாயும் அநேகனாயும் உள்ள இறைவன் மீதே பரிபூரணமாக ஒன்றி நிற்க வேண்டும். எதையும் விட்டுவைக்காமல் நமது ஜீவன் முழுவதையும் இறைவன் ஒருவனுக்கே அர்ப்பணமாக்க வேண்டும். இவ்வாறு மனிதச் சிறு அகந்தை தன்னைவிட அனந்தம் மடங்கு பெரிதான பரம் பொருளின்பால் திரும்பி, தன்னை அதற்கு அர்ப்பணித்து பரிபூரண சரணாகதியடைதலே இந்த யோகத்தின் அடிப்படையான இயக்கமாகும்.

மேன்மேலும் உணர்வில் வளர்ச்சியடைந்து, விரிவடைந்து ஜீவனின் ஆழத்தில் மொட்டாயிருக்கும் தெய்வத்தன்மை முழு மலர்ச்சியடையச் செய்வதே மனிதப் பிறவியின் நோக்கம்... இக்காரியத்தையே இயற்கைப் பரிணாமம் செய்து வருகிறது. ஆனால் இயற்கை வழியில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகின்றது, குழப்பங்கள், தவறுகள், திசை மாறுதல், பின் செல்லுதல் போன்ற தடைகள் உண்டாகின்றன. இயற்கையின் நத்தை வேகத்தைத் துரிதப்படுத்தி, கூடியவரை நேரே சென்று இப்புவிக்கு நாம் வந்த உன்னத நோக்கத்தை விரைவில் நிறைவேற்றுவதே நமது யோகத்தின் குறிக்கோள்.

விரிவான பொருளில் குறிக்கோள், இலட்சியம் என்றெல்லாம் பேசுவது தவறெனில் சொல்லலாம். ஏனெனில் முன்னேற்றத்திற்கு முடிவே இல்லை. இருப்பினும், உடனடியாக அடுத்தபடியாக அடைய வேண்டிய ஓர் இலட்சியம் இருக்க முடியும். மனிதனின் இப்போதைய நிலையைத் தாண்டி அவனது ஆன்மா அடைய முயலும் ஒரு நிலையே அது. இப்போதுள்ள நிலையைவிட உயர்ந்த, பரந்த ஜீவநிலைக்கு உயரவும் அந்நிலை கீழிறங்கி வந்து அவனுடைய பல்வேறு பாகங்களையும் உருமாற்றவும் முடியும். அவனுடைய உணர்வு விரிவடைந்து ஒளிபெற்று அவன் முக்தனாகவும் சித்தனாகவும் ஆகலாம். இந்த மாற்றம் தனி மனிதனளவில் நில்லாது உலகில் பரவினால் ஒரு தெய்வீக மனித இனம் அல்லது புதியதோர் அதிமனித இனம் தோன்றலாம். இந்த புதிய தெய்வீகப் பிறப்பே நமது இலட்சியம்.

மனித உணர்விலிருந்து தெய்வ உணர்விற்கு வளர்தல், நமது ஆன்மா மட்டுமின்றி நமது இயற்கைப் பாகங்களும் பூரணமாக தெய்வத்தன்மை அடைதல் - இதுவே நமது யோகத்தின் முழுப் பொருளும். தெய்வீக மனித இனம் அல்லது அதிமன இனத்தின் இலட்சணம் என்ன? குறுகிய புறஞ்செல்லும் அகந்தையை விரட்டிவிட்டு அந்த இடத்தில் இறைவனை அரியாசனம் ஏற்ற வேண்டும். அகந்தையை அகற்ற வேண்டுமானால் ஆசையை விட்டொழிக்க வேண்டும், இப்பொழுதுள்ளதுபோல் ஆசை நிறைவேற்றமே மனித வாழ்வின் நோக்கமாயிருக்கக் கூடாது.


பிராணனிலுள்ள ஆசை களையப்படுவது போலவே தடுமாறும் மனத்தின் அரைகுறை உண்மைகளும், பிழைகளும், பிளவுபட்ட, அகங்கார, குறுகிய சிந்தனையும் அறிவும் மறைய வேண்டும். அது படிப்படியாக வளர்ந்து சுயஞ்சோதியாக, உண்மை - உணர்வாகப் பரிணமிக்க வேண்டும். இவைபோலவே நமது தெளிவற்ற சிறு நோக்குக் கொண்ட அகங்கார இச்சா சக்தியும் மறைந்து அதன் இடத்தில் இறைவனது இச்சா சக்தியோடு ஒத்தியங்குவதும் தெளிவும், வலிமையும், வேகமும் கொண்டதும், பிழையும் தடுமாற்றமும் அற்றதுமான ஓர் உன்னத இச்சா சக்தி வேலை செய்ய வேண்டும். உண்மையான திருப்தி அளிக்க முடியாத, மேலெழுந்தவாரியான, பலவீனமான, அகங்கார உணர்ச்சிகளெல்லாம் விலக்கப்பட்டு அங்கு ஆழ்ந்து பரந்த சைத்திய உள்ளம் வெளிப்பட வேண்டும். நமது உணர்ச்சிகளெல்லாம் இறைவன் கோயில் கொண்டுள்ள இந்த சைத்திய உள்ளத்தால் தூண்டப்பட்டு தெய்வ அன்பாகவும் தெய்வானந்தமாகவும் புடமிடப்பட வேண்டும். இத்தகைய அதிமனிதனைத் தோற்றுவிப்பது நமது யோகத்தின் நோக்கமாகும்.

சாதாரண மனித வாழ்வில் முக்கால் பாகத்திற்குமேல் புறத்தே செல்லும் செயல்களாகவே அமைந்துள்ளது. ஞானி, பக்தன், சிந்தனையாளன், கவிஞன், ஓவியன் போன்ற மிகச் சிலரே உள்ளாழ்ந்து வாழ்கின்றனர். இந்த இரண்டும் இணைந்து அவை இரண்டிற்கும் மேலான ஒன்றாக மாறுவதே பூரண வாழ்வாகும். அறிவினாலும், அன்பினாலும் இறைவனுடன் ஒன்றும், ஞான, பக்தி யோகங்கள் மட்டும் இந்த நிலையை அடையப் போதாது. ஆகவே இச்சா சக்தியாலும் செயலாலும் இறைவனுடன் நம்மை ஒன்றச் செய்யும் கர்மயோகமும் பூரண யோகத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்.

நமது சிந்தனையுடன் உணர்ச்சிகளும் மாற்றம் அடைந்து, ஆனால் அதே மாற்றம் நமது செயல்களிலும் ஏற்படாவிட்டால் நமது சித்தி பூரணமாயிராது.

ஆனால் இந்தப் பூரணமான மாற்றம் ஏற்பட வேண்டுமானால் நமது மனத்தையும் இதயத்தையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்தால் மட்டும் போதாது. நமது செயல்களையும் அர்ப்பணிக்க வேண்டும். நமது செயலாற்றல்களையெல்லாம் நமக்குப் பின்னால் நிற்கும் தெய்வ சக்தியின் கரங்களில் ஒப்படைத்துவிட வேண்டும். நான் கர்த்தா, தொழில் புரிவோன் என்ற உணர்வு மறைந்துவிட வேண்டும். இதை ஒரே நாளில் செய்து விட முடியாது. படிப்படியாகச் செய்ய வேண்டும். தெய்வ சக்தி நேரிடையாக நமது திறமைகளை பயன்படுத்தும்படிக்கு புறத்தோற்றங்களுக்குப் பின்னாலுள்ள இறைவனின் இச்சா சக்தியின் கரங்களில் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் மறைவாயுள்ள இறைவனது சக்தியே நமது செயல்களுக்கெல்லாம் மூலம். இறைவனது இச்சா சக்தியின் அநுமதியின்றி நாம் செயல்பட முடியாது.

நமது சிறிய, கோணலான வாழ்வும் வினைகளும் முற்றிலும் மாற்றமடைந்து தெய்வ வாழ்வு, தெய்வ இச்சாசக்தி, தெய்வ ஆற்றல் இவற்றின் வெள்ளமாக இவை பாய வேண்டும். இப்பொழுது மறைவாக நின்று நமது வாழ்வையும் செயல்களையும் தாங்கும் அவை நேரடியாகப் பெருக்கெடுக்க வேண்டும். நமது இயற்கைப் பாகங்கள் முற்றிலும் உருமாற்றமடைந்து சர்வ தூய, தடையற்ற, மகிழ்தேற்கும் வாய்க்கால்களாக ஆக வேண்டும். மேலே விளக்கப்பட்டுள்ள பூரண நிவேதனமும் பரிபூரண சரணாகதியும் அவற்றின் பயனாய் வரும் முழுமையான திருவுருமாற்றமும் வெளிப்பாடுமே பூரண கர்மயோகத்தின் அடிப்படையான உபாயமும் இலட்சியமுமாகும்.

ந‌ன்‌‌றி : வைகறை
(ஸ்ரீஅர‌வி‌ந்த‌‌ர் ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)
பி‌ப்ரவ‌ரி 21
 

No comments:

Post a Comment