நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

பழங்காலத்தில் மனிதன் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வந்தான். அவனுக்கும் ஆசாபாசங்கள் இருந்தது. ஆனால், எந்தத் தவறுகளுக்கும் இடங்கொடாமல் வாழ்ந்து வந்தான். காலம் செல்லச் செல்ல நாகரீகத்தின் பெயரில் சமுதாயம் வளர்ச்சி பெற்றது. கூடவே பல புதிய புதிய பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

இதன் விளைவாக, பல நல்ல விஷயங்களும், சில கெட்ட பழக்கங்களும் கை கூடின. வளர்ச்சி, சமூக அந்தஸ்து, புதிய புதிய கண்டு பிடிப்புகள் போன்றவை சிறந்த முன்னேற்றப் படிகளாகும். அதே நேரத்தில், முறை தவறிய உடலுறவுப் பழக்கங்களும் ஏற்பட்டன. இருந்தாலும் யாருக்கும் எந்த நோயும் வரவில்லை.

இன்று இருப்பது போன்ற மேக நோய், கிரந்தி, வெட்டை போன்றவை பாங்காலத்தில் காணப்படவில்லை. அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருந்தன. எந்தெந்தப் பிரச்சினைகள் வந்தால் என்னென்ன மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை பெறலாம் என்ற இயற்கை மருத்துவத்தை மக்கள் தெளிவாக உணர்ந்து வைத்திருந்தனர்.

எல்லா நோய்களுக்கும் மருத்துவம் உண்டு. மருந்துகள் இல்லாத எந்த நோயும் தோன்றவேயில்லை என்பதை ஆழமாக மக்கள் நம்பினார்கள். மக்களின் சுகாதாரம் காக்கப்பட பெரியோர்களும் பெரும் முயற்சிகளை எடுத்தார்கள். இதற்காக, மருத்துவ குணங்கள நிரம்பிய பல்வேறு மூலிகைகளைக் கண்டறிந்து அவற்றைப் புனிதப் படுத்தினர். அந்த மூலிகைகளைக் கொண்டு சிகிச்சையளித்தனர்.

இம்மரங்கள் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையோடு இருந்து அவற்றிற்கு புனித அந்தஸ்தைக் கொடுத்தனர். இவ்வாறாக, இயற்கை மருத்துவம் வளர்ச்சிப்பெற்றது.

ஆனால், பல துறவிகளும், முனிவர்களும், மேதைகளும் கூட இதன் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறவும் செய்தனர். இதன் விளைவாக புனித நூல்களிலும் இதனைப் பற்றிய குறிப்புகள் அதிகளவில் இடம் பிடித்தது.

பல புத்த, ஜைன மதத் துறவிகளும், முனிவர்களும் மருத்துவ குணங்கள் நிறைந்த மரங்களின் அடியில் அமர்ந்து தவம் இருந்தமையால் அவை தெய்வீக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துவிட்டது. அது போன்ற மரங்களில் “குங்கிலிய” மரமும் ஒன்றாகும்.

காணப்படுமிடம்

பொதுவாக குங்கிலிய மரம் தமிழகத்தில் குறைவான அளவிலேயே காணப்படுகின்றது. இவற்றில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று தம்பாகிய இரகம், மற்றது ராக்ஸ்பர்ஜி இரகம் ஆகும். தம்பாகியா குங்கிலிய மரத்தை காங்கு என்றும், தம்பாகம் என்றும் அழைப்பார்கள்.இவை கிட்டதட்ட 18 மீட்டர் உயரம் வரையில் வளரும். ராக்ஸ்பர்ஜி மரம் மேலகிரி, கல்வராயன் மலைப்பகுகிகளில் சுமார் 15 மீட்டர் உயரம் வரையில் வளர்கின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இவற்றைக் காணலாம்.

தம்பாக்கியா குங்கிலிய மரங்கள் வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளிலும், ராக்ஸ்பர்ஜி குங்கிலிய மரம் கோவை, ஈரோடு, மதுரை மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

இந்தியக் காடுகளிலுள்ள மரங்களில் 14 சதவீத காடுகளில் குங்கிலிய மரங்கள்தான் நிறைந்து இருக்கின்றது. அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலுள்ள காடுகளில் இவற்றை அதிகளவில் காணலாம். ஆண்டு மழையளவு 10 சென்டி மீட்டரிலிருந்து 46 செ.மீ. வரையுள்ள பிரதேசங்களில் இம்மரங்களை அதிகளவில் காணலாம்.

மலைப்பிரதேசங்கள், பள்ளத் தாக்குகள், மேட்டு நிலங்கள் என எல்லா இடங்களிலும் மிக உயரமாக வளரும். இம்மரத்தின் அடி மட்டச்சுற்றளவு சுமார் இரண்டு மீட்டர் இருக்கும். 18 முதல் 30 மீட்டர் உயரம் வரையில் கூட இவை வளரும் தன்மை கொண்டதாகும். வளர்வதற்கு ஏற்ற நல்ல சீதோஷ்ண நிலை கிடைத்தால் சுமார் 150 அடி உயரம் வரையில் வளரும்.

வளரும் மரத்தில் பாதி உயரத்திற்கு மேல் கிளைத்து, அடர்ந்த தழையமைப்புடன் வளரும். இம்மரத்தின் பட்டை சிவப்பு நிறம் கலந்த கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் வழவழவென்று இருக்கும். பட்டையின் நீள்வாக்கில் வெடிப்புகளும் தோன்றும்.


பொதுவாக குங்கிலிய மரத்தின் இலைகள் அளவுகளில் பெரியதாக, அரை அடி முதல் ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும் கொண்டு முட்டை வடிவில் இருக்கும். குங்கிலிய இலைகள் பச்சையாக இருந்தாலும் துளிர்கள் சிவப்பு நிறத்தில் நுனி மழுங்கியிருக்கும். இதன் இலைகள் தோலைப்போன்று தடித்து இருக்கும். இதில் பூக்கள் பிப்ரவரி - ஏப்ரல் மாதங்களில் மஞ்சள் கலந்த வெண்மை நிறப் பூக்கள் அடர்த்தியாகப் பூக்கும். பூக்கள் பூத்த பிறகு, நெற்றுக்கள் உருவாகி, வளர்ச்சி அடைந்து முற்றிவிடும். இதனுள் ஒரு விதை இருக்கும். இவை உதிர்ந்து காற்றிலே பறந்து தாய் மரத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி அங்கு நிலத்தில் பட்டு பின்னர் முளைக்கிறது.

பொதுவாக, மரங்கள் விதையிட்டதிலிருந்து 15 வருடங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். குங்கிலிய இலைகளை விவசாயிகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துகின்றார்கள். தரத்தில் இது குறைந்த தரமுடையதாகும்.இதன் இலைகளைத் தைத்து வாழையிலையைப் போன்று உணவு பரிமாறவும் பயன்படுத்துகின்றார்கள்.

பொருளாதாரத்தில் குங்கிலிய மரப்பட்டை தோல் பதனிடலிலும், அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. குங்கிலிய மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினைக்கொண்டு சாம்பிராணி, பெயிண்ட், வார்னிஷ், கார்பன் பேப்பர்கள், தட்டச்சு இயந்திர நாடாக்கள், ஓட்டுப் பலகை, ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள் போன்றவை தயாரிக்க மிகவும் பயன்படுகின்றன. குங்கிலிய விதைகளைக் கோழித் தீவனத்திலும் கலக்கச் செய்யலாம். இதன் விதைகளிலிருந்து எண்ணெயும் எடுக்கப்படுகின்றது. இவை சோப்புத் தொழிசாலைகளிலும், மிட்டாய்த் தயாரிப்பிலும் மிகவும் பயன்படுகிறது.

குங்கிலிய மரக்கட்டைகளைக் கொண்டுதான் ரயில்வே தண்டவாளங்களில் உள்ள கட்டைகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர உத்திரங்கள், தூண்கள், சட்டங்கள், மரப்பாலத்திற்கான பொருட்கள், இரயில் பெட்டிகள், வண்டிகள் மற்றும் பல கட்டுமானச் சாமான்கள் செய்யவும் பயன்படுகின்றது. ஆக, ஏராளமான பொருளாதாரப் பயன்களை உடையதாக இம்மரம் விளங்குகிறது.

மருத்துவ குணங்கள்

பொதுவாக, குங்கிலிய மரத்திலிருந்து எடுக்கப்படுகின்ற பிசின் சிறந்த மருத்துப் பொருளாகும். வெப்பத்தினைத் தந்து சளித்தொல்லையை அகற்றுகிறது. சிறுநீரை அதிகளவில் பெருக்கச் செய்கிறது. வெள்ளைப்பாடு, இரத்தப்போக்கு போன்ற பெண்களின் பிரச்சினைகளுக்கு இவை சிறந்த நிவாரணியாகும். சீழ்க் கட்டிகள், அதில வருகின்ற புண்கள், எலும்புகளில் தோன்றும் புண்களைப் போக்கிவிடும்.

குங்கிலிய மரத்தில் சிறுதுளிகள், வெட்டுக்களைப் போட்டு பிசினைப் பிரித்து எடுப்பார்கள். இது ஆரம்பத்தில் வெள்ளையாகவும், காய்ந்த பிறகு கருப்பாகவும் மாறிவிடும். ஒரு ஆண்டில் ஒரு மரத்திலிருந்து 4.4 கிலோ அளவில் பிசின் கிடைக்கும். இதனை “குங்கிலியம்” என்று கூறுவார்கள்.

வெள்ளைக் குங்கிலியம் வெட்டை நோய், மேக நோய், சீழ்க்கட்டிகள், நாட்பட்ட புண்கள், மூலத்தினால் உருவாகும். கட்டிகள், சொறி, சிரங்குகளைப் போக்கி குணப்படுத்துகிறது.

கருப்பு குங்கிலியம் வாயுக் கோளாறுகளால் உருவாகும் கட்டிகளைப் போக்குகிறது. காது, மூக்கு, உதடுகளில் வரும் குறைபாடுகளை நீக்குகிறது. மேகப் புண்களைக் குணப்படுத்துகிறது. மேக நோயினால் உருவாகும் தொல்லைகளைப் போக்குகிறது. சளித்தொல்லை, ஜலதோஷம், விஷத்தன்மைகளை சீர்ப்படுத்துகிறது.

இந்த குங்கிலியத்தைப் பொடி செய்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும். உடல் புத்துணர்வோடு இருக்கும். இன்பத்தைப் பெருக்கி உடலை கட்டுக்கோப்போடு வைத்துக் கொள்ளும்.
பெரியவர்கள், சிறு குழந்தைகளுக்கு வரும் சீதபேதியைக் குணப்படுத்த குங்கிலியத்தைச் சர்க்கரையுடன் கலந்து கொடுப்பார்கள். துர்நாற்றத்தைப் போக்கி, நல்ல நறுமணம் கமழ குங்கிலியத்தைப் புகை போடுவார்க்ள.

இதனைக்கொண்டு தைலம் கூட தயாரிக்கப்படுகின்றது. இதனை காதுகளில் ஏற்படும் வலி, கொப்பளங்கள், தோல் நோய்களுக்கும், நரம்புக் கோளாறுகளுக்கும் மருந்தாகப் பூசலாம்.

குங்கிலிய மரத்தண்டு மற்றும் இலைகள் இரத்தப் போக்கைத் தடுத்து நிறுத்த உதவுகின்றன. நாடாப் புழுக்கள், வயிற்றுப் பூச்சிகளைச் சாகடிக்கின்றன. தொற்று நோய்கள் அண்டாத வண்ணம் நம்மைக் காத்துக் கொள்கின்றன. மேலும் இவை சிறந்த வலிநிவாரிணியாக செயல்படுகின்றன. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளதால் மேக நோய், வெட்டை நோய், மேகப் புண்கள் போன்ற தவறான உடலுறவுப் பழக்கங்களால் உண்டாகும் நோய்களையும் இவை குணப்படுத்துகின்றன. வயிற்றுப் புண்கள், அல்சர், எலும்புகளில் உருவாகும் வலி, பாக்டீரியா கிருமிகளின் தொற்றுகளால் உருவாகும் பாதிப்புகள், தொழுநோய், வெள்ளைப்பாடு, இருமல், இரத்தசோகை, சொறி, சிரங்கு, புண்களுக்கு இவை நலன் தருகின்றது.

குங்கிலிய மரத்திலிருந்து வெளிப்படும் கனி இனிப்பாக இருக்கும்.இவை இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, உடலுறவில் அதிகளவு இன்பம் பெறச் செய்கின்றது. இந்திரியத்தை அதிகளவில் சுரக்கச் செய்து ஆண்மைக்கு வலிமை தருகிறது. எரிச்சல், எரி புண்களைக் குணப்படுத்துகின்றது. காசநோய், தோல் நோய்களுக்கு நல்ல நிவாரண மருந்தாக அமைகின்றது.

குங்கிலியப் பிசின் காய்ச்சல், பேதி, சீதபேதி, மண்ணீரல் வீக்கம், உடல் பருமன், மாதவிடாயின் போது வலி எண்டாதல், தலைவலி, பல்வலி, கண்களில் ஏற்படும் வலி, பார்வைக் கோளாறுகளுக்கு நன்மை தருவதாக பல ஆங்கில மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

யுனானி மருத்துவம்

யுனானி மருத்துவர்கள் குங்கிலியத்தை இரத்தபேதி, இரத்தமூலம், சிறுநீர்ப்பைக் குறைபாடுகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள். இதனைக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற “மர்ஹம் ரால்” என்ற மருந்து வெட்டை, கிரந்தி, மேகப்புண், மூலம், மூச்சுக் குழாயில் ஏற்படும் புண்களைப் போக்க வல்லது. காயங்களில் சீழ் படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. கை, கால், எலும்புகளில் ஏற்படும் கீரல்கள், வெடிப்புகளைப் போக்கவும் இந்த மருந்து பூசப்படுகின்றது.

அளவு
இதனைப் பவுடராக்கி 5 கிராம் அளவிலும், கஷாயமிட்டு 100 மில்லி அளவிலும் ஒரு வேளைக்கு உரிய மருந்தாகப் பயன்படுத்தலாம். குங்கிலியப் பிசின் 3 கிராம் அளவில் ஒரு வேளைக்குக் கொடுக்கலாம்.

அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள்

குங்கிலியப் மரக்கட்டையில் சால்கோல், கிளைக்கோசைடு ஹைடிராக்ஸி சால்கோன், பீட்டா குளுக்கோபைரானோசைடு, பாலிஃபீனால், ஹோப்பியா ஃபினால், லியூக்கோ அந்தோசயானிடின் போன்ற வேதிப் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. குங்கிலிய விதைகளைக் கொண்டு எடுக்கப்படுகின்ற எண்ணெயில் சைமீன், டெட்ரா ஹைடிரோ காம்மா காடினின், காடிலின் டைமீத்தைல் நாஃப்தலீன், ெட்டரா மீத்தைல் நாப்தலீன் போன்ற பல வேதிப் பொருட்கள் அடங்கியிருக்கின்றன.

இம்மரக்கட்டையில் டானின்கள் அதிகளவில் காணப்படுகின்றன.மரக்கட்டையில் 12 சதவீதமும், உலர்ந்த கட்டைத் தூளில் 40 சதவீதமும் டானின்கள் அடங்கயிருக்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படுகின்ற பிசினில் பல மருத்துவப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை இருப்பதனால்தான் வெட்டை, கிரந்தி நோய்களைக் குணப்படுவத்துவதாகவும், தொற்றுக் கிருமிகளை அழிக்கவல்ல தன்மைகளைப் பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம்

குழந்தைகளுக்கு வருகின்ற சீத பேதியைக் குணப்படுத்த குங்கிலியப் பொடி ஒரு கிராம் அளவு எடுத்து, அதனுடன் சர்க்கரை கலந்து கொடுத்து வரலாம்.

குங்கிலிப் பொடி 5 கிராம், மாம் பருப்புத்தூள் 10 கிராம், இலவம் பிசின் தூள் 5 கிராம், ஜாதிகக்காய்த்தூள் 10 கிராம் இவைகளை கலந்து ஒரு வேளைக்கு ஒரு கிராம் அளவில் தொடர்ந்து கொடுத்து வந்தால், பேதி குணம்பெறும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

குங்கிலியப் களிம்பு தயாரிக்கும் முறை

ஒவ்வொரு வகை குங்கிலிய மெழுகையும் 100 கிராம் அளவில் எடுத்து, அதனை சிறு தீயிலிட்டு உருக்கி, இதில் நல்லெண்ணெய் 300 கிராம் அளவு சேர்த்து, சூடு ஆறுவதற்கு முன்பாகவே வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனைத் துணியில் தடவி புண்களின் மேல் போட்டு வரலாம். மேலும் கந்தகம், காசுக் கட்டி, வெங்காரம் இவைகளைச் சேர்த்துப் போட்டால் சிவப்பு நிறம் உண்டாக்கி அவை எளிதில் ஆறிவிடும்.

இதனை சாராயத்தில் கரைத்து, அதன் அளவு முட்டையின் வெண்கருவைச் சேர்த்துக் கலந்து மேல்பக்கமாகப் பூசி வருவதால் வாதநோய்களும், வாதத்தினால் உண்டாகும் வலிகளும் குணப்படும்.

சித்த மருத்துவர்கள் வெள்ளைப்பாடு நோயைக் கட்டுப்படுத்த குங்கிலியப் பிசினை , நெய்விட்டுப் பொறித்துத் தண்ணீரிலிட்டு நன்றாக அடித்துப் பிசைந்து, துணியில் வடிகட்டி நீரை வடித்து விடுவார்கள். துணியின் மேல் தங்கி நிற்பதை எடுத்து தக்க அளவில் கொடுத்து வந்தால் வெள்ளைப்பாடு போய்விடும். உடல் வலிமைபெறும்.

குங்கிலியத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம், வெண்ணெய், பஸ்பம் போன்றவை மேகப்புண், வெட்டை நோய்க்கு மிகவும் நல்ல மருந்தாகும்.

குங்கிலிப் பிசினில் பூனைக்கண் குங்கிலியம் என்ற ஒரு வகை இருக்கின்றது. இது பொன்னிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் பூனைக்கண் போல் இருக்கும். இதனைக் கொண்டுத் தயாரிக்கப்படுகின்ற எண்ணெய் வீக்கத்தைக் குணப்படுத்த வல்லதாக இருக்கின்றது.

குங்கிலியம் பற்றிய புராணச் செய்தி

இந்து சமுதாயத்தில் 63 நாயன்மார்கள் பற்றிய வரலாறுகள் உண்டு. இதில் ஒருவரான..
குங்கிலியக்கலய நாயனார் என்று அழைக்கப்படும் குங்கிலியக் கலையர் திருக்கடவூரில் பிராமண குலத்தில் பிறந்தவர். இவர் இறைவனுக்கு குங்கிலிய தூபம் இடுவதையே பெரும்பணியாகக் கொண்டு தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் இதற்காகவே செலவு செய்து வறுமை நிலைக்கு ஆளானவர். உணவுக்காக நெல் வாங்கி வரக் கொண்டுபோன தன் மனைவியின் தாலியை, எதிரில் வந்த ஒரு மூட்டை குங்கிலியத்துக்கு, அந்தத் தாலியைக் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்று, கோயிலிலே வைத்து தூபமிட்டுக் கொண்டு நின்று தமது மனைவி, மக்கள் பட்டினியை மறந்துவிட, இந்த உறுதியைக் கண்டு சிவபிரான் இவரின் வீடெல்லாம் நெல் முதலிய நிதிகளால் நிறையச் செய்தார் எனும் செய்திகள் காணக்கிடைக்கின்றன.

No comments:

Post a Comment